சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (PESO) புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதிகாரிகள் கூறியதாவது: பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரசாயன மூலப்பொருட்களின் கலவை பணிகள் காலை 6 மணிக்கு தொடங்கி காலை 10 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பட்டாசு தயாரிப்பு பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது.

இந்த உத்தரவு, சமீபத்தில் நடந்த தொடர் விபத்துகளின் பின்னணியில் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்.19 அன்று விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட மற்றொரு வெடி விபத்தில் இருவர் உடல் சிதறி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மொத்தமாக பட்டாசு வாங்குபவர்களின் விவரங்கள் மற்றும் அடையாள அட்டைகளைப் பெற்று பதிவாக வைத்திருக்க வேண்டும் என்றும் PESO அறிவுறுத்தியுள்ளது. விதிமீறல் ஏற்பட்டால் தொழிற்சாலை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.