நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி என கூறப்படும் சலீம் டோலா (59) துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி தேசிய புலனாய்வு அமைப்பும் உள்ளூர் போலீசாரும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் அவர் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் டோலா மீது 10 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மஹாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தில் ரூ.252 கோடி மதிப்பிலான ‘எம்.டி.’ (மெபெட்ரான்) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அவர் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்படுகிறார்.
புலனாய்வு தரவுகளின்படி, சர்வதேச செயற்கை போதைப்பொருள் கடத்தலில் டோலா முக்கிய புள்ளியாக கருதப்படுகிறார்; ஆண்டுக்கு ரூ.500 கோடி மதிப்பிலான கடத்தல் வலையமைப்பை அவர் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. துபாயை மையமாக வைத்து செயல்பாடுகளை ஒருங்கிணைத்த அவர், தாவூத் இப்ராஹிமின் ‘டி-கம்பெனி’யுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் இந்தியாவின் கோரிக்கையின்பேரில் இன்டர்போல் ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வெளியிட்டிருந்தது. போலி யு.ஏ.இ. அடையாள ஆவணங்களை பயன்படுத்தி இஸ்தான்புலில் மறைந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது டோலா துருக்கி போலீசார் காவலில் உள்ளார். இந்தியா–துருக்கி இடையே நேரடி நாடு கடத்தல் ஒப்பந்தம் இல்லாததால், அவர் வைத்திருந்த போலி யு.ஏ.இ. பாஸ்போர்ட் அடிப்படையில் யு.ஏ.இ. உதவியுடன் அவரை இந்தியா கொண்டு வர மத்திய புலனாய்வு அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஆண்டு டோலாவின் மகன் தாஹிர் டோலா மற்றும் அவரது உதவியாளர் சலீம் முகமது சோஹைல் ஷேக் ஆகியோர் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டு கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





