உலகின் முக்கிய ஓட்டப்பந்தய போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் மாரத்தான் போட்டி லண்டனில் நடைபெற்றது. பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்றனர்.

42.2 கிமீ தூரத்தை கென்யாவின் செபஸ்டியன் சாவே 1 மணி 59 நிமிடம் 30 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் புதிய உலக சாதனையையும் பதிவு செய்து, மாரத்தான் தூரத்தை அதிகாரப்பூர்வமாக 2 மணி நேரத்திற்குள் முடித்த முதல் வீரர் என்ற மைல்கல்லையும் எட்டினார்.

இந்த சாதனை, 2023-ல் சிகாகோவில் மறைந்த கென்ய வீரர் கெல்வின் கிப்டம் அமைத்திருந்த 2 மணி 00 நிமிடம் 35 வினாடிகள் என்ற உலக சாதனையை 65 வினாடிகள் வித்தியாசத்தில் முறியடித்ததாகும்.

உகாண்டாவின் யோமிப் கெஜலிச்சா 1 மணி 59 நிமிடம் 41 வினாடிகளில் முடித்து 2வது இடத்தைப் பெற்றார். 29 வயதான சாவே நடப்பு சாம்பியனும் ஆவார்; அவரது சாதனைக்கு உலகம் முழுவதும் வாழ்த்துகள் குவிந்தன.

போட்டிக்குப் பின் பேசிய சாவே, இலக்கை கடந்ததும் நேரத்தை பார்த்தபோது மிகுந்த உற்சாகம் ஏற்பட்டதாகவும், இது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்றும் தெரிவித்தார். மேலும், போட்டிக்கு முன் ஒரு நிருபரிடம் ‘ஒருநாள் 2 மணி நேரத்திற்குள் முடிப்பவன் நானாக இருப்பேன்’ என்று கூறியிருந்ததையும் நினைவுகூர்ந்தார்.