புதுடில்லி: குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன் ஜாமின் மனுவை நீதிமன்றங்கள் நிராகரிக்க அதிகாரம் பெற்றுள்ளன. ஆனால், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து வழக்கமான ஜாமின் கோரும்படி அவருக்கு உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்டில் நிலத் தகராறு தொடர்பான மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் முன் ஜாமின் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து வழக்கமான ஜாமின் கேட்குமாறு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, உஜ்ஜல் புயான் அமர்வு, இவ்வகை சரணடைவு உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது என்றும், நீதிமன்ற அதிகார வரம்பை மீறியது என்றும் கூறியது.

முந்தைய தீர்ப்பை மேற்கோள் காட்டி உயர் நீதிமன்றம் இத்தகைய உத்தரவை வழங்கியிருந்தாலும், முன் ஜாமின் மறுக்கப்படும் நிலையில் சரணடைய உத்தரவிடுவது தவறான நடைமுறை என்றும், அது முற்றிலும் அதிகார வரம்பற்ற செயல் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக விளக்கியது.