தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள தகவலின்படி, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர் விகிதத்தில் தென் மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் 43% பேர் அரசு மருத்துவமனைகளைத் தேர்வு செய்கிறார்கள் என அந்த அறிக்கை கூறுகிறது.
நாடு முழுவதும் மாநில வாரியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் விகிதம், தொற்றா நோய்களுக்கு சிகிச்சை, சராசரி சிகிச்சைச் செலவு, மருத்துவக் காப்பீடு பயன்பாடு உள்ளிட்ட விவரங்களை NSO வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் 3.6% பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவதாகவும், தனியார் மருத்துவமனைகளில் 53.4% பேர் தங்கி சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தென் மாநிலங்களில் கேரளா 30%, கர்நாடகா 29.8%, தெலங்கானா 29.3% என பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மேலும், தமிழகத்தில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற சராசரியாக ₹1,357 செலவாகிறது என்றும், இது தேசிய சராசரி ₹6,631-ஐ விட குறைவாகும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. மாநிலத்தில் 99% பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெறுகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், தனியார் மருத்துவமனை புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் NSO ஆண்டுதோறும் ‘ரேண்டம்’ முறையில் சர்வே நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது என்றனர். இந்தத் தரவுகளை வைத்து சுகாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை மத்திய அரசு பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர்.



