சென்னை: தமிழகத்தில் ஓட்டுப்பதிவு முடிந்து மூன்று நாட்கள் கடந்தும், ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் எத்தனை வாக்குகள் பதிவானது என்ற தொகுதி வாரியான விபரங்களை தேர்தல் கமிஷன் இன்னும் வெளியிடவில்லை.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.87 கோடி பேர் வாக்களித்ததாகவும், மொத்த ஓட்டுப்பதிவு சதவீதம் 85.10 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 86 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை.

பொதுவாக ஓட்டுப்பதிவு நாளின் இரவில் தோராயமான சதவீதம் அறிவிக்கப்பட்டு, மறுநாள் துல்லியமான இறுதி விபரம் வெளியிடப்படும். மேலும் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எனப் பிரித்து தொகுதி வாரியான பங்கேற்பு விபரங்களும் வெளியிடப்படும்.

ஆனால் இந்த முறை, தொகுதி வாரியான ஓட்டுப்பதிவு விபரங்கள் மூன்று நாட்களாகியும் வெளியாகவில்லை. மாநிலத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் இதை வெளியிடுவதில் போதிய ஆர்வம் காட்டவில்லை என்பதே தாமதத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள், அனைத்து தொகுதிகளின் ஓட்டுப்பதிவு தரவுகளைச் சரிபார்த்து இறுதி விபரத்தை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், முழு விபரங்கள் இன்று வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.