வாஷிங்டன்: மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் சூழலில், ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் “வெடித்து சிதறக்கூடும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமைதி ஒப்பந்தத்தை ஏற்க வலியுறுத்தும் நோக்கில், அமெரிக்கா ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

நிருபர்களிடம் பேசிய அவர், தற்போதைய நிலவரத்தில் ஈரான் எண்ணெய் குழாய்களில் இருந்து கொள்கலன்களுக்கோ அல்லது கப்பல்களுக்கோ எண்ணெயை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். இப்படியான சூழலில் ஏதேனும் காரணத்தால் குழாய் மூடப்பட்டால், திடீர் வெடிப்பு ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.

அத்தகைய சம்பவம் இன்னும் மூன்று நாட்களுக்குள் நிகழலாம் என்று தன்னிடம் கூறப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டார். வெடிப்பு ஏற்பட்டால், முன்பிருந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு சேதம் ஏற்படும்; அது “மிகவும் சக்திவாய்ந்த” விளைவுகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ஈரான் தலைமை தன்னை அணுகலாம் என்றும், பேச விரும்பினால் பாதுகாப்பான தொடர்பு வசதிகள் மூலம் அழைக்கலாம் என்றும் டிரம்ப் கூறினார்.