அமெரிக்கா-ஈரான் இடையேயான நீண்டகால பகைமைக்கு முடிவுக்குக் கொண்டு வர வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அமைதிப் பேச்சுகள், அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பிரதிநிதிகள் பயணம் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டதையடுத்து முட்டுக்கட்டையில் சிக்கியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரண்டாம் கட்ட பேச்சுக்கான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அது ரகசியமாக திட்டமிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுக்காக செல்லவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது.
சமூக வலைதள பதிவில் டிரம்ப், ஈரான் தலைமையில் அதிகாரப் போட்டி மற்றும் குழப்பம் நிலவுவதாகக் குறிப்பிட்டு, யாரிடம் அதிகாரம் உள்ளது என்பதே தெளிவில்லை என கூறியுள்ளார். பேச்சு நடத்த வேண்டும் என்றால் ஈரான் தான் அமெரிக்காவை அழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், டிரம்ப் தான் முதலில் முன்வர வேண்டும் என ஈரான் தரப்பு எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றம் நீடிப்பதுடன், மீண்டும் போர் சூழல் உருவாகும் அபாயமும் பேசப்படுகிறது. கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா-ஈரான் இருமுனை முற்றுகை போன்ற நிலை உருவாகி, அந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து 97% குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தாக்கமாக உலக சந்தையில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதன்படி, உலக எரிசக்தி நெருக்கடியை பயன்படுத்தி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க ஈரான் முயல்கிறது; இதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை தேர்தல் நெருக்கம், போரால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் காரணமாக சில நேட்டோ நாடுகளில் உருவாகும் அதிருப்தி, மேலும் அமெரிக்க நிர்வாகத்திற்குள் கருத்து வேறுபாடுகள் மற்றும் கடற்படைச் செயலாளர் ஜான் பெலன் போன்ற உயர்மட்ட அதிகாரிகளின் ராஜினாமா ஆகியவை காரணிகளாக குறிப்பிடப்படுகின்றன.





