சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவைத் தொடர்ந்து, சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த சென்னை வாசிகள் ஒரே நேரத்தில் திரும்பியதால், சென்னைக்கு வரும் பயணங்களில் திடீர் கூட்டம் ஏற்பட்டது.

தகவலின்படி, ஏப்.23 அன்று நடந்த ஓட்டுப்பதிவுக்காக பலர் கார் உள்ளிட்ட வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அடுத்த நாள் மற்றும் வார விடுமுறை சேர்ந்ததால், குடும்பத்தினருடன் சென்றவர்களும் அதிகம் இருந்தனர்.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் நேற்று பலரும் ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி புறப்பட்டதால், பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. விமானத்தில் திரும்ப முயன்றவர்களுக்கு பல விமானங்களில் ஓரிரு இருக்கைகள் மட்டுமே இருந்ததால் டிக்கெட் கிடைப்பது கடினமாகியது.

இதன் காரணமாக மீதமிருந்த இருக்கைகளின் கட்டணம் வழக்கத்தைவிட பல மடங்கு உயர்ந்ததாகவும், பலருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விமான வட்டாரங்கள் கூறுகையில், திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே முன்பதிவுகள் அதிகமாக இருந்ததாகவும், மீதமிருந்த சில இருக்கைகளுக்கு ‘டிமாண்ட்’ அடிப்படையில் கட்டணம் உயர்ந்ததாகவும் தெரிவித்தனர்.