ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஏழு ராஜ்யசபா எம்.பி.க்கள் பா.ஜ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் பா.ஜ.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுக்களை ராஜ்யசபா தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தள்ளுபடி செய்து, இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
செய்தி விவரப்படி, ஆம் ஆத்மியின் தேசிய முகமாக கருதப்பட்ட ராஜ்யசபா எம்.பி. ராகவ் சத்தா மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே சமீப காலமாக உரசல் இருந்தது. விமான நிலையங்களில் மலிவு விலை உணவுக் கடைகள் அமைத்ததற்காக பா.ஜ.க. அரசை சத்தா பாராட்டிய பின்னர், அவரிடமிருந்த ராஜ்யசபா துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டு, அசோக் குமார் மிட்டல் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சத்தா கடந்த வாரம் ஆம் ஆத்மியிலிருந்து விலகுவதாக அறிவித்து, கட்சியின் 10 ராஜ்யசபா எம்.பி.க்களில் தன்னுடன் சேர்த்து ஏழு பேர் பா.ஜ.க.வில் இணைய தயாராக இருப்பதாக தெரிவித்தார். சத்தாவுடன் அசோக் குமார் மிட்டல், ஹர்பஜன் சிங், சந்தீப் குமார் பதக், டாக்டர் விக்ரம்ஜித் சிங் சாஹ்நே, ஸ்வாதி மாலிவால் மற்றும் ராஜேந்தர் குப்தா ஆகியோரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
பத்தாவது அட்டவணை விதிகளின்படி, ஒரு கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு பேர் வேறு கட்சியுடன் இணைந்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என குறிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் இணைப்பை செல்லுபடியாக அறிவித்த சபை தலைவர், ராஜ்யசபா செயலக பதிவேடுகளிலும் அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
245 உறுப்பினர்கள் கொண்ட ராஜ்யசபாவில் பா.ஜ.க. பலம் 113 ஆகவும், பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணி பலம் 148 ஆகவும் உயர்ந்துள்ளது. சாதாரண மசோதாக்களுக்கு இது உதவியாக இருக்கும் நிலையில், அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு தேவையான மூன்றில் இரு பங்கு ஆதரவை எட்ட இன்னும் கூடுதல் ஆதரவு தேவைப்படும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.





