சென்னை–பெங்களூரு இடையே வெறும் 73 நிமிடங்களில் பயணம் செய்யும் வகையிலான புல்லட் ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிகப் பெரிய ஏஐ டேட்டா மையம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தென்னிந்திய அதிவேக ரயில் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

புல்லட் ரயில் சேவை பயண நேரத்தை கணிசமாக குறைத்து, அமராவதி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, புனே, மும்பை போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் என அவர் கூறினார்.

அவர் குறிப்பிட்ட பயண நேரங்களின்படி, அமராவதி–ஹைதராபாத் 70 நிமிடங்கள், அமராவதி–சென்னை 112 நிமிடங்கள், ஹைதராபாத்–புனே 1 மணி 55 நிமிடங்கள், புனே–மும்பை 48 நிமிடங்கள், சென்னை–பெங்களூரு 73 நிமிடங்கள், ஹைதராபாத்–பெங்களூரு 2 மணி 8 நிமிடங்கள் ஆக இருக்கும்.

மேலும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தென்கடற்கரை ரயில்வே மண்டலம் ஜூன் 1-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும், கொல்கத்தா–சென்னை இடையேயான தற்போதைய இரட்டை பாதை நான்கு பாதையாக தரம் உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.