ஏப். 26 அன்று நடந்த குஜராத் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த முடிவுகள் முக்கியமாக கவனிக்கப்படுகின்றன.
இந்த தேர்தல் 15 மாநகராட்சிகள், 34 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 260 தாலுகா பஞ்சாயத்துகளில் உள்ள சுமார் 9,200 பதவிகளுக்காக நடைபெற்றது. பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.
மாநகராட்சி பகுதிகளில் 55% வாக்குப்பதிவு நடந்ததாகவும், மொத்தமாக 67% வாக்குகள் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய முடிவுகள் மற்றும் முன்னிலை நிலவரப்படி, மேஹ்சானா, மோர்பி, நதியாத், வபி ஆகிய 4 மாநகராட்சிகளை பாஜ கைப்பற்றியுள்ளது. இவை சமீபத்தில் தான் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டவை.
மேஹ்சானா, மோர்பி, நதியாத் ஆகிய மாநகராட்சிகளில் காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெறவில்லை. மேலும் ஆமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவ்நகர், ஜாம் நகர், ஆனந்த், கரம்சத், காந்திதம், நவ்சரி, போர்பந்தர், சுரேந்தர் நகர் ஆகிய மாநகராட்சிகளில் அதிக வார்டுகளில் பாஜ முன்னிலையில் உள்ளது.





