இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகரிக்கும் நோக்கில், இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்.டி.ஏ.) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன என்று புதுடில்லியில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் சரக்கு வர்த்தகம், சேவைகள், சுங்க நடைமுறைகள், வர்த்தக எளிதாக்கம், சுகாதார மற்றும் தர நெறிமுறைகள், தகராறு தீர்வு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய 20 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவுக்கு கிடைக்கும் முக்கிய பலன்களில், ஜவுளி, பிளாஸ்டிக், தோல், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான இந்தியப் பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தையில் 0% சுங்கவரி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் 15 ஆண்டுகளில் சுமார் ரூ.1.88 லட்சம் கோடி அளவிலான அன்னிய முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள், கல்வி, சுற்றுலா போன்ற துறைகளில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திறமையான இந்தியர்களுக்காக 5,000 விசா ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை வேலைவாய்ப்பு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மது ஏற்றுமதிக்கு சுங்கவரி விலக்கு வழங்கப்படுவதும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
நியூசிலாந்துக்கான பலன்களாக, இந்தியாவில் அதன் 70% பொருட்களுக்கு சந்தை அணுகல் வழங்கப்படுவது, ஆடு இறைச்சி, மரப்பொருட்கள், நிலக்கரி போன்றவற்றுக்கு உடனடி சுங்கவரி விலக்கு அளிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிள், கிவி, தேன் போன்ற விவசாயப் பொருட்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன; சில கடல் உணவுகளுக்கு 7 ஆண்டுகளில் முழு சுங்கவரி நீக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், விவசாயிகள் மற்றும் குறு, சிறு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் பால், காய்கறி, சர்க்கரை, செம்பு, அலுமினியம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா சுங்கவரி சலுகைகளை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





