டெஹ்ரான்: அமெரிக்கா–ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அமைதிப்பேச்சு மூலம் உடன்பாடு எட்டப்படும் வரை இந்த போர் நிறுத்தம் தொடரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அண்டை நாடான பாகிஸ்தானில் நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றியடையவில்லை. இரண்டாம் கட்ட பேச்சை நடத்த முயற்சிகள் நடந்தாலும், இரு தரப்பும் மாறி மாறி நிபந்தனைகள் முன்வைப்பதால் அது தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட தகுதி உள்ளதா என்று ஈரானின் தஷ்டெஸ்தான் மாகாண எம்.பி. இப்ராஹிம் ரெஸாயி கடுமையாக கேள்வி எழுப்பினார்.
பாகிஸ்தான் “நல்ல நண்பன்” என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், மத்தியஸ்தத்திற்கு தேவையான நம்பகத்தன்மை அதனிடம் இல்லை என்று அவர் கூறினார். பாகிஸ்தான் பெரும்பாலும் அமெரிக்க நலன்களையே கருத்தில் கொள்கிறது, அமெரிக்க நிலைப்பாடுகளுக்கு எதிராக பேச மறுக்கிறது; எனவே ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுபவரை நேர்மையான மத்தியஸ்தராக ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.





