அமெரிக்காவுடன் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன், ஹார்முஸ் ஜலசந்தி குறித்து சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஈரான் நிபந்தனைகள் விதித்துள்ளது.
அமெரிக்கா–ஈரான் மோதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அமைதிப் பேச்சு மூலம் உடன்பாடு எட்டப்படும் வரை இந்த இடைநிறுத்தம் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலின்படி, பாகிஸ்தானில் நடந்த முதல்கட்ட பேச்சு வெற்றியளிக்கவில்லை. இரண்டாம் கட்ட பேச்சுக்கான முயற்சிகள் நடந்தாலும், இருதரப்பும் மாறிமாறி நிபந்தனைகள் முன்வைத்ததால் பேச்சு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஈரான் தரப்பில் இருந்து மூன்று கோரிக்கைகள் பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் லெபனான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கு அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க வேண்டும்; அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே சர்வதேச கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது மற்றும் நிர்வகிப்பது குறித்து ஆலோசிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஹார்முஸ் பகுதியை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது. இவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக கூறப்படும் அணுசக்தி மற்றும் யுரேனியம் செறிவூட்டல் குறித்து பேச முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது.





