கோவில் சட்டம் குறித்து அதிகாரிகள் நிலைப்பாட்டை ஐகோர்ட் கடுமையாக விமர்சித்தது
தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் ஹிந்து அறநிலையத்துறை (HR&CE) சட்டம் குறித்து கலெக்டர், தாசில்தார், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு “எவ்வித தெளிவும் இல்லை” என அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, திண்டுக்கல் மாவட்டம் கோணப்பட்டி மலையில் அரசு தரப்பில் அகற்றப்பட்ட முருகன் சிலையை மீண்டும் நிறுவ உத்தரவிட்டது.
கோணப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் தாக்கல் செய்த மனுவில், கோணப்பட்டி மலையிலுள்ள ஜோதிமுருகன் கோவிலில் முருகன் சிலை இருந்ததாகவும், தைப்பூச விழாவையொட்டி பூஜை மற்றும் அன்னதானம் நடத்த திட்டமிட்ட நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி ஜனவரி 20 அன்று வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிலையை அகற்றியதாகவும் கூறினார். தற்போது அந்த சிலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு, அனுமதியின்றி சிலை நிறுவப்பட்டதாகவும், இது சட்டம்–ஒழுங்கு பிரச்னையை உருவாக்கக்கூடும் எனவும் வாதிட்டது. ஆனால் அந்த குன்று அரசு புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தப்பட்ட சர்வே எண்ணில் இருப்பதுடன், அங்கு நீண்ட காலமாக ‘வேல்’ நிறுவப்பட்டு கிராம மக்கள் வழிபட்டு வருவதாகவும், அது வருவாய்த்துறை ஆவணங்களிலும் பதிவாக இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. ‘வேல்’ வழிபாட்டுக்கு தடையில்லை என அரசு தரப்பு ஒப்புக்கொண்டதே, அங்கு வழிபாட்டு தலம் இருப்பதை உறுதி செய்ய போதுமானது எனவும் நீதிமன்றம் கூறியது.
‘வேல்’ முருகனுக்குரியது என்பது பொதுவாக அறியப்பட்ட உண்மை என்பதால், ஏற்கனவே உள்ள வேலுடன் சேர்த்து முருகன் சிலையை பிரதிஷ்டை செய்வது தவறல்ல; இதற்கு எதிரான அரசு வாதத்திற்கு ஆதாரமே இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் “கரடுமுரடான பாதை, பாதுகாப்பு இல்லை” என்பதால் அனுமதி வழங்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது எனக் கூறி, கிராம மக்கள் விருப்பமில்லை என்பதற்கும் அரசு தரப்பு எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டியது.
முருகனுக்கு பூஜை அல்லது திருவிழா நடத்துவதால் மட்டும் சட்டம்–ஒழுங்கு பிரச்னை உருவாகாது என்றும், பக்தர் என்ற முறையில் மனுதாரருக்கு வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் கோர உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அறநிலையத்துறை பதிவு, மனுதாரர் அறங்காவலர் அல்ல என்பதுபோன்ற அரசு தரப்பு ஆட்சேபனைகள் HR&CE சட்டக் கட்டமைப்புக்கு முரணானவை எனக் கூறி, அதிகாரிகளின் நிலைப்பாடு கோவில்–அறநிலையத்துறை சட்டம் குறித்த புரிதல் இல்லாமையை வெளிப்படுத்துகிறது என நீதிமன்றம் கடுமையாக குறிப்பிட்டது.





