சிக்கிமில் ரூ.4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். சிக்கிம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை வேகப்படுத்த, தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாகவும் அவர் உறுதி அளித்தார்.
காங்டாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சிக்கிமின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக கூறினார். சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவிலிருந்து விரைவுச்சாலை அமைப்பது மற்றும் காங்டாக்கில் ரிங் சாலை உருவாக்குவது போன்ற திட்டங்களை அவர் குறிப்பிட்டார்.
வடகிழக்கின் எட்டு மாநிலங்களையும் இந்தியாவின் “அஷ்டலட்சுமிகள்” என வர்ணித்த மோடி, அவை செழிப்பு மற்றும் நல்வாழ்வின் பல்வேறு முகங்களை பிரதிபலிப்பதாக தெரிவித்தார். சிக்கிமின் பொருளாதாரத்தில் சுற்றுலா முதுகெலும்பாக இருப்பதாகவும், போக்குவரத்து வசதிகள் மேம்பட்டால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்றும் கூறினார். சிக்கிம் அமைதி, ஆன்மிகம், நல்வாழ்வு ஆகியவற்றின் தளமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
மேலும், மாநிலத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், குறிப்பாக கால்பந்து மற்றும் வில்வித்தை போன்ற துறைகளில் உள்ள திறமையாளர்கள் சாதனை படைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டதாக காங்கிரஸை அவர் விமர்சித்தார். சுகாதாரத் துறையிலும் கவனம் செலுத்தப்படவில்லை என கூறிய அவர், தற்போதைய அரசு சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தி, தரமான மற்றும் மலிவு விலையிலான மருத்துவ சேவைகளை வழங்க உறுதியாக செயல்படுகிறது என்றார்.





