ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தில், ஆவணங்கள் இல்லாததால் வங்கிப் பணத்தை பெற முடியாமல் தவித்த குடும்பம் எதிர்கொண்ட சிக்கல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியினத்தைச் சேர்ந்த 50 வயது தொழிலாளி ஜீது முண்டா, சகோதரியின் இறப்பை நிரூபிக்கும் ஆவணங்கள் கிடைக்காத நிலையில், அவரது சடலத்தையே வங்கிக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
தகவலின்படி, ஜீது முண்டாவின் மூத்த சகோதரி கல்ரா முண்டா (56) இரண்டு மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் கால்நடைகளை விற்று சேமித்த ரூ.20,000 அவரது வங்கி கணக்கில் இருந்ததாகவும், அதை எடுக்க ஜீது வங்கியை அணுகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வங்கி அதிகாரிகள் இறப்புச் சான்றிதழ், சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டனர். அவை இல்லையெனில் கணக்கு வைத்தவர் நேரில் வர வேண்டும் எனவும் கூறியதாக ஜீது தெரிவித்தார். எழுதப் படிக்கத் தெரியாததால் நடைமுறைகள் புரியவில்லை என்றும், பலமுறை சென்றும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதனால் விரக்தியடைந்த அவர், புதைக்கப்பட்டிருந்த சகோதரியின் சடலத்தை தோண்டி எடுத்து தோளில் சுமந்து வங்கிக்கு வந்து, வங்கி முன் வைத்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட ஊழியர்கள் பதற்றமடைந்த நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் உதவி செய்வதாக உறுதியளித்ததுடன், அதிகாரிகள் முன்னிலையில் சடலம் மீண்டும் மயானத்தில் புதைக்கப்பட்டது.
கியோன்ஜார் துணை கலெக்டர் உமா சங்கர் தலாய், விதிமுறைகள் தெரியாததால் அவர் விரக்தியில் இவ்வாறு செய்ததாக கூறினார். வங்கி ஆவணங்களை கேட்பது சரியானதே என்றாலும், இறப்புச் சான்றிதழ் மற்றும் சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழை விரைவாக பெற நிர்வாகம் வழிவகை செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில், ஒடிசா கிராமீன் வங்கிக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட விளக்கத்தில், நடைமுறைகள் விளக்கப்பட்டதாகவும், அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறி, துன்புறுத்தல் இல்லை; இறப்புச் சான்று கிடைத்தவுடன் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.





