பாகிஸ்தானில் பதுங்கி உள்ள தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி என கூறப்படும் சலீம் டோலா (59), போதைப்பொருள் வழக்குகள் தொடர்பாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் முக்கிய புள்ளி என கருதப்படும் டோலா மீது, இந்தியாவின் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 10 வழக்குகள் உள்ளதாக விசாரணை அமைப்புகள் கூறுகின்றன. மஹாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் ரூ.252 கோடி மதிப்பிலான எம்.டி. (மெபெட்ரான்) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கிலும் அவர் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

மத்திய புலனாய்வு அமைப்பின் கோரிக்கையை தொடர்ந்து, இன்டர்போல் ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, துருக்கி தேசிய புலனாய்வு அமைப்பும் உள்ளூர் போலீசாரும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் இஸ்தான்புலில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவியுடன் அவரை இந்தியா கொண்டு வர மத்திய புலனாய்வு அமைப்புகள் முயற்சி மேற்கொண்டதாகவும், இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எமிரேட்ஸ் அரசுடன் பேச்சு நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, திங்கட்கிழமை காலை சிறப்பு விமானத்தில் டில்லிக்கு அழைத்து வரப்பட்ட டோலா தற்போது உளவுத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளார்.

விசாரணைக்காக அவரை மும்பை போலீசாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டோலாவின் மகன் தாஹிர் டோலா மற்றும் அவரது உதவியாளர் சலீம் முகமது சோஹைல் ஷேக் ஆகியோர் துபாயிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.