திருமணம் செய்யாமல் ‘லிவ்-இன்’ முறையில் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்ற பின்னர் உறவு முறிந்தால், அதனைத் தொடர்ந்து பாலியல் பலாத்கார புகார் அளிக்க முடியுமா என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

வழக்கின் விவரப்படி, 23 வயது பெண் ஒருவர் ஒரு ஆணுடன் திருமணம் செய்யாமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்து பின்னர் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த ஆண் உறவிலிருந்து வெளியேறினார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் சுரண்டல் செய்ததாக கூறி, குற்றவியல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என பெண் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு, திருமண உறவாக இருந்தாலும் லிவ்-இன் உறவாக இருந்தாலும், வாழ்க்கைத் துணையைப் பிரிவது அவர்களின் உரிமை எனக் குறிப்பிட்டது. வயது வந்த இருவர் சுயமாக முடிவெடுத்து திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் போது, அதனால் ஏற்படும் சட்ட சவால்களை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது.

பரஸ்பர சம்மதத்துடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்ற பின்னர் ஏற்பட்ட பிரிவை காரணமாக்கி, ஆண் மீது பலாத்காரம் மற்றும் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எப்படி எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உறவு முறையற்றதாக கருதப்பட்டாலும், அந்த உறவில் பிறந்த குழந்தை ஒருபோதும் முறையற்றதாகாது என்றும் கூறியது.

மேலும், குழந்தையை பராமரிக்க சட்டப்படி அந்த ஆணிடமிருந்து பராமரிப்பு நிதியுதவியை பெண் கோரலாம் என்றும், இந்த விவகாரத்தை மத்தியஸ்தம் மூலம் சுமுகமாக தீர்க்கலாம் என்றும் அமர்வு கருத்து தெரிவித்தது.