சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாற்றப்படலாம் அல்லது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விலகலாம் என்ற தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டி கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளது.

அழகிரி மாற்றப்பட்டதையடுத்து, 2024 பிப். 17 அன்று செல்வப்பெருந்தகை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட உள்ளார் என்ற கட்டத்திலேயே கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தாலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆதரவால் அவர் பதவியேற்றதாக தகவல் கூறுகிறது.

சட்டசபை தேர்தலில் கூட்டணி தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விஜயின் த.வெ.க. உடன் கூட்டணி அமைக்க ராகுல் விரும்பியதாக பேசப்பட்ட நிலையில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்பதில் செல்வப்பெருந்தகை உறுதியாக இருந்ததாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் இணைந்து கார்கேவை சந்தித்து கூட்டணியை உறுதி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ராகுலுக்கு முழு உடன்பாடு இல்லை என கூறப்படும் நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் இணைந்து அவர் பரவலாக பிரசாரம் செய்யவில்லை என்றும், காங்கிரஸ் போட்டியிட்ட 28 தொகுதிகளில் ஆறு இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்ததாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. இதைத் தொடர்ந்து, தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன் என்று செல்வப்பெருந்தகை பிரசாரத்தின் போதே அறிவித்ததாக கூறப்படுகிறது.

மே 4-ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அதன் பின் சில நாட்களில் அவர் விலகலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், மாநிலத் தலைவர் பதவிக்காக ஐந்து பெயர்களை பரிந்துரைக்க தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கரிடம் ராகுல் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில், சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் முயற்சியில் இருப்பதாகவும், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், அழகிரி, முன்னாள் எம்.பி. செல்லக்குமார் உள்ளிட்டோரும் மேலிடத்தை தொடர்பு கொண்டதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.