சென்னை: தரமற்ற குடிநீர் கேன்களை விற்பனை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்; மேலும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
கோடை வெயில் அதிகரிப்பதால் கேன் குடிநீர் விற்பனை உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி சிலர் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய தரமற்ற தண்ணீரை விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் கேன் விற்பனையை கண்காணிக்க நியமன அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல்களை கேன் குடிநீர் நிறுவனங்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முறையான அனுமதி இல்லாமல் அல்லது தரநிலைகளை மீறி குடிநீர் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கேன்களில் நிறுவனம்/உற்பத்தியாளர் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்ற விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் கூறினர்.
ஒரு லிட்டர் குடிநீரில் குறிப்பிட்ட அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; கேன் தண்ணீரை நேரடி சூரிய ஒளியில் தேக்கி வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு கேனை 30 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது; பயன்படுத்தும் கேன்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பலமுறை பயன்படுத்திய கேன்களில் தண்ணீர் விற்றால் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறும் கடைகள் மற்றும் ஆலைகளுக்கு ரூ.5,000 அபராதம் விதித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து பலமுறை புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





