கள் (பனைநீர்) இறக்கவும் விற்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என்றும், சட்ட நடைமுறைகளை பின்பற்றியே அந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் திங்கள்கிழமை தெரிவித்தது.

தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணையின் போது இந்த வாதம் முன்வைக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், மத்திய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கள் பாதுகாப்பான உணவுப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது இயற்கையான பானம்; உடலுக்கு தீங்கு இல்லை என்றும் கூறப்பட்டது.

மேலும், தமிழக மதுவிலக்கு சட்டத்தின் சில பிரிவுகள் கள் இறக்குதல், விற்பனை, இருப்பு வைத்தல் ஆகியவற்றைத் தடை செய்கின்றன; இது மத்திய சட்டத்துக்கு முரணானது என மனுவில் வாதிடப்பட்டது. கள் விற்பனைக்கு நிபந்தனைகள் வகுத்து அனுமதி வழங்கலாம்; இதனால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் கூறி, தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் மகாராஜன், களில் கலப்படம் ஏற்பட்டால் உயிரிழப்பு நிகழ வாய்ப்பு இருப்பதாகவும், கள் தடை அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என்றும் தெரிவித்தார். நீதிபதிகள் என். சதீஷ்குமார், எம். ஜோதிராமன் அமர்வு வழக்கை ஜூன் 7-க்கு ஒத்திவைத்தது.