வாஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் ஆண்டு விருந்தின்போது, அரங்கின் அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
1921 முதல் தொடரும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சி, சிறந்த பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வாகவும் அறியப்படுகிறது. ஹில்டன் நட்சத்திர விடுதியின் தரைதள அரங்கில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் வான்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அரங்கிற்கு வெளியே பாதுகாப்பு சோதனை நடைபெறும் பகுதியின் அருகே ஒருவர் ஓடி வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், ஐந்து அல்லது ஆறு முறை குண்டுகள் வெடித்த சத்தம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அரங்குக்குள் இருந்தவர்கள் மேஜை, நாற்காலிகளின் கீழ் பதுங்கினர்.
மேடையில் இருந்த டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் பதுங்கிய நிலையில், ரகசிய பாதுகாப்புப் படையினர் அவர்களை விரைவாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில், இந்த குழப்பத்திற்கிடையிலும் கலைஞர் மைக்கேல் கிளான்ஸ் என்பவர் அமைதியாக அமர்ந்து சாலட் சாப்பிட்டது கவனம் பெற்றது. பின்னர் அவர், அங்கு பாதுகாப்புப் படையினர் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், முதுகு வலி காரணமாக தரையில் படுக்க முடியாது என்றும், புதிய உடையுடன் அழுக்கு தரையில் அமரவும் படுக்கவும் விருப்பமில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.




