தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவால், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குள் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. அந்த பதிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) வெற்றி பெறும் என அவர் கூறியுள்ளார்.

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் த.வெ.க. 40–45 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என்றும், மொத்தமாக 25 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் விஜய் வெல்வது உறுதி என கூறிய அவர், காங்கிரஸ் த.வெ.க. உடன் கூட்டணி வைத்திருந்தால் அது வெற்றி கூட்டணியாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார். அடுத்த மக்களவைத் தேர்தலில் விஜயுடன் கூட்டணி அமைத்தால் தமிழகம், புதுச்சேரியில் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே பதிவில், காங்கிரஸில் இருந்து கொண்டு மாற்றுக் கட்சிக்காக வேலை செய்பவர்கள் கட்சியை உள்ளிருந்தே அரிப்பவர்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்த பதிவுகள் தி.மு.க. கூட்டணிக்குள் உரசலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி நீடிக்காது என்ற ஊகங்களின் பின்னணியிலேயே மாவட்டத் தலைவர்கள் இப்படிப் பதிவிடுவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.