ஹார்முஸ் வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு ஐநா அழைப்பு

ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வைத்து கப்பல்கள் தடையின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தகவலை அவர் நியூயார்க் நகரிலிருந்து வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில் இந்த வேண்டுகோள் வந்துள்ளது. இருதரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சு நடந்து உடன்பாடு எட்டப்படும் வரை இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த மோதலால் உலகளாவிய எரிசக்தி வினியோகத்திற்கு முக்கிய பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கப்பல் போக்குவரத்துக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஜலசந்தியை திறந்து விட வேண்டும் என்றும் குட்டரெஸ் வலியுறுத்தினார்.

மேலும் சுங்கவரிகள் வேண்டாம், பாகுபாடு வேண்டாம்; வர்த்தகம் மீண்டும் தொடங்க வேண்டும்; உலகப் பொருளாதாரம் இயங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்து என்பது பொருளாதாரமும் மனிதாபிமானமும் சார்ந்த கட்டாயம் எனவும் அவர் தெரிவித்தார்.