புதுடில்லி: விமான எரிபொருள் (ATF) விலை தொடர்ந்து உயர்வதால் கடுமையான நிதி அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் விமான நிறுவனங்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில், தற்போதைய எரிபொருள் விலை காரணமாக பல வழித்தடங்கள் நிதி ரீதியாக சாத்தியமற்றதாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

விலை உயர்வு தொடர்ந்தால், தங்களின் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் கூட்டமைப்பு கூறியுள்ளது. குறிப்பாக, கட்டணத்தை எளிதில் உயர்த்த முடியாத வழித்தடங்களில் எரிபொருள் செலவு உயர்வை ஈடுகட்டுவது மிகுந்த சிரமமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எரிபொருள் செலவு உயர்வு பணப்புழக்கத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி நிதி நெருக்கடியை தீவிரப்படுத்துவதாக கூறியுள்ள நிறுவனங்கள், விமான எரிபொருள்மீதான 11% கலால் வரியை தற்காலிகமாக நீக்கவும், மாநிலங்களின் வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளன.