பெங்களூரில் எல்.இ.டி. திரைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதிக்கும் வேகமாக பரவி, நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நந்தினி லே-அவுட் பகுதியில் ராஜ்குமார் நினைவிடத்தை ஒட்டிய சாலையில் உள்ள பெண்கள் பி.ஜி. விடுதி, அந்த தொழிற்சாலைக்கு அடுத்தே அமைந்துள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, விடுதி கட்டடத்தையும் பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.
நான்கு மாடி கட்டடமான அந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர். தீ விபத்தை உணர்ந்ததும் அவர்கள் அறைகளில் இருந்து அவசரமாக வெளியேறி, முதல் மாடியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர்.
பின்னர் விடுதியின் காம்பவுண்ட் சுவரில் ஏறி வெளியே வந்து பாதுகாப்பாக சென்றனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தொழிற்சாலை மற்றும் விடுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான துல்லிய காரணம் இன்னும் தெரியவில்லை; மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பெண்கள் காம்பவுண்ட் சுவரை தாண்டி சாலையில் குதித்து தப்பும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.





