புதுடில்லி: சட்டசபை தேர்தல் கட்டம் முடிந்ததும் எரிபொருள் விலை உயரும் என்ற வதந்திகள் பரவிய நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த எந்தத் திட்டமும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரான் மீது நடந்த தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாகவும், இதனால் சில நாடுகள் எரிபொருள் விலையை மாற்றியமைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை; இதற்கிடையில் ஏப்.29 நடைபெற உள்ள மேற்கு வங்க இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலை முன்னிட்டு விலை உயர்வு வதந்தி மீண்டும் பரவியது.
இதன் தாக்கமாக ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மக்கள் பீதியடைந்து பெட்ரோல் பங்குகளுக்கு வாகனங்களுடன் திரண்டதாகவும், சில நிலையங்களில் பெட்ரோல், டீசல் விற்றுத் தீர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சுஜாதா ஷர்மா, மாநில அரசுகளுடன் தொடர்பில் இருந்து அனைத்து விற்பனை நிலையங்களும் கண்காணிக்கப்படுகின்றன என்றார். எரிபொருள் இருப்பை உறுதி செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், எங்கும் பற்றாக்குறை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தும் எந்த முன்மொழிவும் இல்லை; வதந்திகளை நம்பாமல் பீதியால் எரிபொருள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.





