டில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆன்லைன் விசாரணை, வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடந்து கொண்டிருந்த போது ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் செவ்வாய்க்கிழமை திடீரென தடைபட்டது.
தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய் மற்றும் நீதிபதி தேஜாஸ் கரியா ஆகியோர் ஒரு வழக்கை ஆன்லைனில் விசாரிக்கத் தொடங்கிய நிலையில், நண்பகல் 12:56 மணியளவில் வீடியோவில் திடீரென ஆபாச காட்சிகள் தோன்றின. இதையடுத்து விசாரணை உடனடியாக நிறுத்தப்பட்டது.
சிறிது நேரம் கழித்து மீண்டும் விசாரணை தொடங்கியபோதும் அதேபோல் காட்சிகள் மீண்டும் ஒளிபரப்பானதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் ஆன்லைன் அமர்வில் நுழைந்து, அழைப்பு ஹேக் செய்யப்பட்டதாக கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து விசாரணை மீண்டும் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியபோது பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. தொடர்ச்சியான இடையூறால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பதிவாளருக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற நடவடிக்கைகளை வீடியோ வடிவில் பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





