வரும் ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இறக்குமதி சார்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற காரணங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

டில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், வாகன உற்பத்தியாளர்கள் உயிரி எரிபொருட்கள், சிஎன்ஜி, எல்என்ஜி மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற மாற்று எரிபொருட்கள் நோக்கி அதிகமாக நகர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கூறினார். பெட்ரோல், டீசல் ஆகியவை பொருளாதாரமும் சூழலியலும் சார்ந்த கடுமையான சிக்கல்களை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹைட்ரஜன் எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்துக்கான முன்னோடி முயற்சிகளை அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், 10 வழித்தடங்களில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் லாரிகள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹைட்ரஜன் தான் எதிர்காலத்தின் எரிபொருள் என கூறிய கட்கரி, எத்தனாலும் முக்கிய எரிபொருளாக உருவெடுத்து வருவதாகவும் சொன்னார். மூலப்பொருட்களிலிருந்து இந்தியா எத்தனாலை உற்பத்தி செய்து வருவதாகவும், வாகனங்கள் எத்தனால் 20 (E20) எரிபொருளில் இயக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.