சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டம் (PMLA) கீழ் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது அமலாக்கத்துறை (ED) பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த விவகாரம் 2008-ம் ஆண்டுக்குச் செல்லும். அப்போது திமுக ஆட்சியில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் சென்னை திருவான்மியூரில் சிலருக்கு வீட்டுமனைகள் ஒதுக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவி பர்வீன் உள்ளிட்டோர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 2013-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) பெரியசாமி, ஜாபர்சேட் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. பின்னர் பெரியசாமியைத் தவிர மற்றவர்கள்மீது இருந்த வழக்குகள் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன.
அதன்பின் எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பெரியசாமி மனுத் தாக்கல் செய்த நிலையில், அவர்மீதான DVAC வழக்கும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், அந்த DVAC குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு 2020-ம் ஆண்டு ED, PMLA வழக்கை பதிவு செய்திருந்தது.
ED வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு, அடிப்படை வழக்கே நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் PMLA வழக்கு நிலைக்காது எனக் கருதி, ED பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.




