ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட 2025ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, ராணுவத்திற்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ரூ.8.71 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

அறிக்கையில் அமெரிக்கா ரூ.88 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டு முதலிடத்தில் இருப்பதாகவும், சீனா (ரூ.31 லட்சம் கோடி), ரஷ்யா (ரூ.17 லட்சம் கோடி), ஜெர்மனி (ரூ.10 லட்சம் கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்தியா 5வது இடத்திலேயே தொடர்கிறது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நிலவும் பதற்ற சூழல், பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, மேலும் போருக்குத் தயார் நிலைக்காக செய்யப்பட்ட அவசர கால கொள்முதல் நடவடிக்கைகள் ஆகியவை செலவு உயர்வுக்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளன.

அதே காலகட்டத்தில் பாகிஸ்தான் தனது ராணுவச் செலவை 11% உயர்த்தி ரூ.1.10 லட்சம் கோடி செலவிட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. உலகளவில் ராணுவச் செலவு ரூ.268 லட்சம் கோடியை எட்டி, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2.5% ஆக இருந்தது; ரஷ்யா–உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் செலவு 14% உயர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலக ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 8.2% ஆக இருந்து, இந்தியா இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருப்பதாக SIPRI கூறுகிறது. ஆனால் 2021–2025 காலத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 4% குறைந்துள்ளது; ரஷ்யாவிலிருந்து வாங்குவதை படிப்படியாகக் குறைத்து பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலிருந்து அதிகமாக கொள்முதல் செய்யும் போக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.