ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. வணிக கப்பல்களை குறிவைக்கும் தாக்குதல்கள் உலக வர்த்தகத்துக்கும் கடல் போக்குவரத்து சுதந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்பாக நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐநாவுக்கான இந்திய துணை தூதர் யோஜ்னா படேல் இந்தியாவின் அறிக்கையை முன்வைத்தார். ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும், இது இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார பாதுகாப்பு சார்ந்த கவலைகளை அதிகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
ராணுவ நடவடிக்கைகளின் போது வணிக கப்பல்களை குறிவைக்கக் கூடாது என இந்தியா வலியுறுத்தியது. மேலும், இந்த மோதலில் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகளின் உயிரிழப்பு இந்தியாவுக்கு கவலை அளிப்பதாகவும் தெரிவித்தது.
வணிக கப்பல்களை குறிவைப்பதும், கப்பல் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதும், அல்லது ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் மற்றும் வர்த்தக சுதந்திரத்துக்கு தடையாக இருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்தியா கூறியது. சர்வதேச சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்றும், இந்த வழித்தடத்தில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தையும் உலகளாவிய வர்த்தக சுதந்திரத்தையும் விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.





