கரகாட்டம் எனும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை, ஆடும் முறையிலோ உடை அணியும் முறையிலோ எந்த வகையிலும் சிதைக்கப்படக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு கரகாட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எல். விக்டோரியா கவுரி விசாரித்தார்.
விசாரணையில் அரசு தரப்பு, ‘கரகாட்டம்’ என்ற பெயரில் உண்மையான கரகாட்டம் நடத்தப்படாமல், சில இடங்களில் அது ஆபாச ஆடல்–பாடல் நிகழ்ச்சிபோல் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தது.
உத்தரவில் நீதிமன்றம், கரகாட்டம் தமிழ் பண்பாட்டில் போற்றப்படும் நாட்டுப்புறக் கலை என்றும், மழைக் கடவுளான மாரியம்மனுக்கு காணிக்கையாக பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் நடன வடிவம் என்றும் குறிப்பிட்டது. தலையில் பானை/குடம் சமநிலையுடன் வைத்துக் கொண்டு நுணுக்கமான அசைவுகளுடன் ஆடுவது இதன் தனிச்சிறப்பு; இது திறமை, கவன குவிப்பு மற்றும் பக்தியை வெளிப்படுத்தும் எனவும் கூறியது.
எனவே கரகாட்டம் எந்த விதத்திலும் சிதையக் கூடாது என்றும், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதுபோல் முறையான உடைகளை அணிந்து கலைஞர்கள் நிகழ்த்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மனுதாரருக்கு ஒருநாள் மட்டும் கரகாட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.





