மே 4ம் தேதி வெளியாக உள்ள சட்டசபை தேர்தல் முடிவுகள் ‘வளர்ந்த இந்தியா’ என்ற கனவுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தரபிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதை கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் ரூ.36,230 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட 594 கி.மீ. நீளமான, ஆறு வழித்தட கங்கா பசுமைவழி விரைவுச்சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார். இது உத்தரபிரதேச வளர்ச்சிக்கு புதிய வாழ்வாதாரமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விரைவுச்சாலை மூலம் மீரட்–பிரயாக்ராஜ் இடையிலான பயண நேரம் 10–12 மணிநேரத்திலிருந்து சுமார் 6 மணிநேரமாக குறையும் என தெரிவிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் நடைபெறும் 2ம் கட்ட ஓட்டுப்பதிவை குறிப்பிட்ட மோடி, அதிகளவு வாக்குப்பதிவு நடைபெறுவதாக தகவல்கள் கூறுவதாக தெரிவித்தார். நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவுவதாகவும் கூறினார்.

பயமின்றி மக்கள் வாக்களிக்கும் சூழல் உருவாகியிருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் வலுப்பெறும் ஜனநாயகத்திற்கும் நல்ல அடையாளம் என அவர் கூறினார். மேலும், குஜராத் உள்ளாட்சி தேர்தலில் 80–85% நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில் பாஜக வெற்றி பெற்றதாகவும், மே 4 முடிவுகள் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு புதிய ஆற்றலை தரும் என்றும் தெரிவித்தார்.