வாரணாசியில் நடந்த பெண்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகளிரை மீண்டும் ஏமாற்றியதாகவும், பெண்கள் சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு செல்ல விரும்பாத மனப்பாங்கு அவர்களிடம் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இயக்கம் எந்த தடையும் இன்றி முன்னேறி வருவதாக கூறிய அவர், “வளர்ந்த இந்தியா” என்ற இலக்கில் பெண்கள் சக்தி வலிமையான தூணாக இருப்பதாக வலியுறுத்தினார்.
வாரணாசி தொகுதி எம்பி மற்றும் பிரதமர் என்ற வகையில், லோக்சபா மற்றும் சட்டசபைகளில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது உள்ளிட்ட தேச நல இலக்குகளை நிறைவேற்ற மக்களின் ஆசீர்வாதம் தேவை என அவர் தெரிவித்தார். சமீபத்தில் பார்லிமென்டில் இதற்கான முயற்சி தோல்வியடைந்ததற்கு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் காரணம் என்றும் கூறினார்.
பாஜ மற்றும் அதன் கூட்டணி பெண்களை சுயசார்புடன் வளர்க்கவும், அதிகாரமளிக்கவும், வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் பணியில் தலைமைப் பங்கும் வழங்கவும் செயல்படுகிறது என மோடி கூறினார். மேலும், மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிர்க்கட்சிகள் 40 ஆண்டுகளாக தடைகள் ஏற்படுத்தியதாகவும், வாரிசு அரசியல் கொண்ட கட்சிகள் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை விரும்பவில்லை என்றும் விமர்சித்தார்.
இந்த மாநாட்டின் போது ரூ.350 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.




