புதுடில்லி: நாட்டில் வெப்ப அலையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மற்றும் உரிய நிவாரணங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) அறிவுறுத்தியுள்ளது.

கோடை கால கடும் வெப்பத்தின் தாக்கம் விளிம்புநிலை மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வீடற்றோர் மீது அதிகமாக இருப்பதாக ஆணையம் சுட்டிக்காட்டியது. முதியோர், குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் அபாயம் மட்டுமல்லாமல், வாழ்வாதார இழப்புகள் மற்றும் தீ விபத்து போன்ற அபாயங்களும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் டில்லி யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ள ஆணையம், தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தகவலை மேற்கோள் காட்டி 2019 முதல் 2023 வரை வெப்பம் தொடர்பான காரணங்களால் 3,712 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டது. உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிப்பை குறைக்கவும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அல்லது ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையான செயல்முறைகளின்படி உடனடி நிவாரண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.

மேலும், வெப்ப அலையின் தாக்கத்தை குறைக்க மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ள ஒட்டுமொத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை மாநில அரசுகள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழகம் உட்பட ஆந்திரா, அசாம், பீஹார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிஷா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி சென்னை உட்பட 13 இடங்களில் 38 டிகிரி செல்ஷியஸ் (100°F) அளவை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதிகபட்சமாக திருச்சியில் 40.5 டிகிரி செல்ஷியஸ் பதிவானது; சென்னை மீனம்பாக்கம், கோவை, தர்மபுரி, ஈரோடு, கரூர், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருத்தணி மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் 38 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.