தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) இன்ஜினியர்மீது சேறு ஊற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், மஹாராஷ்டிர மாநில அமைச்சர் நிதேஷ் ரானேக்கு சிந்துதுர்க் மாவட்ட நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கு 2019 ஜூலை 4 அன்று நடந்ததாக கூறப்படும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அன்றைய தினம் மும்பை–கோவா நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை கன்காவ்லியில் உள்ள காட் ஆற்றுப் பாலம் அருகே நிதேஷ் ரானே ஆய்வு செய்தபோது, NHAI துணை கோட்ட இன்ஜினியர் பிரகாஷ் ஷெடேகர் உடனிருந்தார்.

சாலைப் பணிகளின் தரம் குறித்து அதிருப்தியடைந்த ரானே, இன்ஜினியர்மீது சேறு ஊற்றியதுடன், பொதுமக்கள் முன்னிலையில் அதில் நடக்க வற்புறுத்தியதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சுமார் ஆறு ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பிறகு தீர்ப்பளித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வி.எஸ். தேஷ்முக், மோசமான சாலைப் பணிகள் குறித்து குரல் கொடுப்பது நோக்கமாக இருந்தாலும், அரசு ஊழியரை பகிரங்கமாக அவமதிக்க உரிமை இல்லை எனக் குறிப்பிட்டார். பல குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விடுவித்த நீதிமன்றம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் அவமதித்தல் என்ற குற்றச்சாட்டில் ரானே குற்றவாளி என அறிவித்து ஒரு மாத சிறை தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக, ரானேக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.