முன்பதிவு டிக்கெட்டில் ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் புதிய வசதிக்கு பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஒரே PNR-ல் உள்ளவர்களுக்கு மேலும் நெகிழ்வான மாற்றம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னதாக, ரயில் டிக்கெட் அட்டவணை (சார்ட்) புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே தயாரிக்கப்படும் போது, இருக்கைகள் உறுதி ஆகாத பயணியர் கடைசி நேரத்தில் பயணத் திட்டங்களை ரத்து செய்வதிலும் மாற்று ஏற்பாடுகளை செய்வதிலும் சிரமங்களை சந்தித்தனர். புதிய விதிமுறைகளின்படி முதல் சார்ட் 10 மணி நேரத்திற்கு முன்பே தயாரிக்கப்படுவதால் மாற்று திட்டங்களை முன்கூட்டியே அமைத்துக் கொள்ள முடிகிறது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது சார்ட் தயாரிக்கும் வரை—அதாவது ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் வரை—‘போர்டிங் பாய்ன்ட்’ (ஏறும் இடம்) மாற்றிக் கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே ஏப்.2-ம் தேதி அறிமுகம் செய்தது.
ஆனால் திருவள்ளூர் ரயில் பயணியர் சங்க நிர்வாகி பாஸ்கர் ரயில்வேக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது ஒரே டிக்கெட் PNR-ல் உள்ள அனைவரும் சேர்ந்து மாற்றினால் மட்டுமே ஏறும் நிலையம் மாற்ற முடிகிறது என குறிப்பிட்டுள்ளார். ஒரே PNR-ல் உள்ளவர்களில் ஓரிருவர் மட்டும் ஏறும் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் ‘பகுதி மாற்றம்’ அனுமதிக்க வேண்டும் என சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள், பயணியர் கோரிக்கையை ஆய்வு செய்து பின்னர் ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தனர்.





