மானசா மாவட்ட நீதிமன்றம், அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக தவறினால் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானுக்கு வழங்கப்பட்ட பெயில் ரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

நஜர் சிங் மன்ஷாஹியா தொடர்ந்த அவதூறு வழக்கு, மானசா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சண்டிகரில் நடைபெறும் முக்கிய கூட்டத்தில் பங்கேற்பதால் நேரில் ஆஜராகுவதில் விலக்கு வழங்க வேண்டும் என பக்வந்த் மான் மனு தாக்கல் செய்தார்.

ஆனால், வழக்கு தொடங்கிய 2022 முதல் இதுவரை அவர் ஒருமுறையும் நேரில் ஆஜராகவில்லை; இதனால் விசாரணை தாமதமாகி வருகிறது என நீதிபதி ரஜிந்தர் சிங் நக்பால் குறிப்பிட்டார்.

முந்தைய விசாரணையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், மீண்டும் விலக்கு கோருவது நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் காட்டும் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

அடுத்த விசாரணைக்கு பக்வந்த் மான் நேரில் ஆஜராக வேண்டும்; தவறினால் பெயில் ரத்து செய்யப்படுவதுடன், ஆஜராகாததற்காக கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்தது.