வாஷிங்டன்: ஈரானுடன் நடைபெறும் மோதலை முடிவுக்கு கொண்டு வர, அந்த நாட்டின் அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தம் அவசியம்; அதைத் தவிர்த்து எந்த சமாதானமும் சாத்தியமில்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

செய்தி விவரப்படி, பிப். 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக போரைத் தொடங்கின. மோதலை முடிக்க பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஏப். 11 அன்று அமைதி பேச்சு நடைபெற்றது. சுமார் 21 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த வார இறுதியில் நடைபெற இருந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையிலும் இருதரப்பினரும் பங்கேற்கவில்லை.

இதன் பின்னர் பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கு ஈரான் 10 அம்ச முன்மொழிவை அனுப்பியதாக கூறப்படுகிறது. அமெரிக்கா முற்றுகையை விலக்கினால் போரை முடிக்கவும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் தயாராக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி திட்டம் குறித்த விவாதத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து பின்னர் பேசலாம் என ஈரான் கூறியதாகவும் தகவல்.

இந்த அணுகுமுறையை அமெரிக்கா நிராகரித்தது. அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் நேர்மையற்ற முறையில் பேச்சு நடத்துகிறது; அணுசக்தி விவகாரத்தைத் தவிர்க்க முயல்கிறது என குற்றஞ்சாட்டினார். ரூபியோவும், அணுசக்தி விவகாரமே மோதலின் மையம்; அதை விவாதிக்காமல் எந்த ஒப்பந்தமும் முடியாது என்றும், ஈரானில் தீவிர மதவாத ஆட்சி நீடிக்கும் வரை அணு ஆயுதங்களை நாடும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

மேலும், அமெரிக்க கடற்படை முற்றுகையால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கவே ஈரான் இத்தகைய சமாதான திட்டத்தை முன்வைத்திருக்கலாம் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருதரப்பும் பிடிவாதமாக இருப்பதால் மோதல் இன்னும் சில காலம் நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.