தமிழ்நாட்டில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கொள்முதல் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது.
2021 முதல் 2023 வரை செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறி அறப்போர் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறை தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியது.
மேலும், வழக்குடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இரண்டு வாரங்களுக்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணைக்கு டான்ஜெட்கோ மற்றும் தமிழக அரசு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து செந்தில் பாலாஜி விளக்கம் அளிக்கையில், டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 1987ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ள விதிமுறைகளே பின்பற்றப்படுகின்றன என்றும், டெண்டர் முடிவுகள் மூன்று குழுக்களால் எடுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார். தவறு எதுவும் நடக்கவில்லை; அரசுக்கு இழப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.





