தமிழகத்தின் சில பகுதிகளில் மே 1 மற்றும் மே 2 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 30 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது.
மே 1 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மே 2 அன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே 5 வரை உள் தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மே 3 வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2–3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. அதிக வெப்பநிலையுடன் ஈரப்பதம் அதிகரிப்பதால் கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





