கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்காக தமிழக பள்ளிக்கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. வெப்ப பாதிப்புகளைத் தவிர்க்க பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
மாணவர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நேரடி வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தில் திறந்தவெளி வகுப்புகள், வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகளை நடத்தக் கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடவேளை தொடக்கத்திலும் மாணவர்கள் நீர் அருந்த நேரம் வழங்கி, அவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சதுரங்கம், கேரம் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபி, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை உள்ள பானங்களைத் தவிர்க்க வேண்டும். பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணியர், முதியோர் மற்றும் இதய நோய் பாதிப்புள்ளோர் வெயிலில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடையில் தலைவலி, தலைசுற்றல், வாந்தி, தசைப்பிடிப்பு, அதிக இதயத்துடிப்பு, மயக்கம் போன்றவை வெப்ப பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்; கடுமையான பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவோ அல்லது 108 அவசர சிகிச்சை உதவியை நாடவோ வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அம்மை நோய், பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை போன்ற கோடையில் பரவக்கூடிய நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால், பரவல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




