வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலாவை சந்தித்த பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “எதிரியை ராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டோம்; அது மீண்டும் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா நான்கு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளனர். வாஷிங்டனில் அவர்களுக்கு அமெரிக்க ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை தமது நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், எதிரியின் கையில் அணு ஆயுதம் கிடைப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும், இந்த விவகாரத்தில் மன்னர் சார்லஸும் தன்னைப் போலவே திட்டவட்டமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த அரசு முறை பயணத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் மன்னர் சார்லஸ் மற்றும் டிரம்ப் பங்கேற்க உள்ளதாகவும், இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





