சர்வதேச எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்புகளான ஒபெக் மற்றும் ஒபெக்+ அமைப்புகளில் இருந்து மே 1 முதல் விலகுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.) அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வியன்னாவை தலைமையகமாகக் கொண்ட ஒபெக் அமைப்பில் மேற்காசியா மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 12 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலையை பாதிக்கும் வகையில் ஒபெக் செயல்படுகிறது; இதில் சவுதி அரேபியா மிகுந்த செல்வாக்கு கொண்ட நாடாக பார்க்கப்படுகிறது.

அறிக்கையின் படி, “விஷன் 2030” போன்ற திட்டங்கள் மூலம் சவுதி தனது பொருளாதாரத்தை நவீனமயமாக்கி, எண்ணெய் சார்பை குறைக்க முயல்கிறது. இதன் ஒரு பகுதியாக, சவுதியுடன் வணிகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பிராந்திய தலைமையகத்தை சவுதிக்கு மாற்ற வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்ததாகவும், இதனால் துபாயை மையமாகக் கொண்டு இயங்கிய சில சவுதி ஊடக மற்றும் வணிக அமைப்புகள் மீண்டும் சவுதிக்கே நகரத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது யு.ஏ.இ.க்கு நேரடி போட்டியாக அமைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்பட்ட பின்னணியில், சமீபத்தில் யு.ஏ.இ. ஆதரிக்கும் கிளர்ச்சியாளர்களின் ஒரு பிரிவுக்கு ஆயுதக் கப்பல் அனுப்பப்பட்டதாகவும், அதை சவுதி குண்டுவீசி தகர்த்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. இத்தகைய சம்பவங்கள் உறவில் விரிசலை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

பொருளாதார ரீதியாக, சவுதி ஆதிக்கம் அதிகம் உள்ள ஒபெக் விதிக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாடுகள் தங்கள் வளர்ச்சியை பாதிப்பதாக யு.ஏ.இ. கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா தன் விருப்பப்படி உற்பத்தியை அதிகரிப்பதால் ஒபெக்கின் சந்தை அதிகாரம் குறைவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறான காரணங்களின் அடிப்படையில் விலகும் முடிவை அறிவித்த யு.ஏ.இ., பின்னர் சொந்த நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலீட்டை உயர்த்தி உலக சந்தையில் தன் நிலையை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.