கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) சில கட்சிகளின் பட்டன்கள் டேப் ஒட்டி மறைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அந்த கட்சிகளுக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாஜ தரப்பில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் டைமண்ட் ஹார்பர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட பால்டா பகுதியில் உள்ள சில ஓட்டுச்சாவடிகளில் பாஜ சின்னத்துக்கான பட்டன் மீது டேப் ஒட்டி மறைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதேபோல் மார்க்சிஸ்ட் கட்சிக்கான பட்டனும் டேப் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை முன்னிட்டு பாஜ முக்கிய பிரமுகர் அமித் மால்வியா வீடியோ ஒன்றை வெளியிட்டார். சமூக வலைதளங்களில் சர்ச்சை அதிகரித்த நிலையில், திரிணமுல் காங்கிரஸ் இது பொய்யான குற்றச்சாட்டு என மறுத்தது.

புகாருக்கு பதிலளித்த மாநில தேர்தல் கமிஷனர் மனோஜ்குமார் அகர்வால், குறிப்பிட்ட ஓட்டுச்சாவடியில் மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் EVM சேதப்படுத்தப்படாததை உறுதி செய்வது, விரலில் வைக்கப்படும் அடையாள மை மற்றும் வாக்காளரின் ஆவணங்கள் உள்ளிட்ட நடைமுறைகளை சரிபார்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

ஏழு மாவட்டங்களில் 142 தொகுதிகளை உள்ளடக்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது; மொத்தம் 1,448 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.