கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 காலை 7 மணிக்கு 142 தொகுதிகளில் தொடங்கியது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.68% ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 23 அன்று 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்ததாகவும், அப்போது 93% ஓட்டுப்பதிவு பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று, மாலை 6 மணி வரை தொடரும்.
தேர்தல் ஆணையத்தின் இடைக்கால தகவலின்படி, காலை 9 மணிக்கு 18.39% ஆக இருந்த ஓட்டுப்பதிவு, காலை 11 மணிக்கு 39.79% ஆக உயர்ந்தது. மதியம் 1 மணிக்கு 61.11% ஆக இருந்தது; பின்னர் பிற்பகல் 3 மணிக்கு 78.68% ஆக அதிகரித்துள்ளது.
இந்த கட்டத்தில் திரிணமுல் காங்கிரசின் அமைச்சர்கள் சந்திரிமா பட்டாச்சார்யா, பிரத்யா பாசு, சுஜித் போஸ், அகில் கிரி, புலக் ராய் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த கட்டத் தேர்தலில் 3.21 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்; இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும் 1.57 கோடி பெண்களும் அடங்குவர்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதள பதிவில், பெருந்திரளாக வந்து வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக பெண்களும் இளைஞர்களும் அதிக அளவில் பங்கேற்று வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.





