தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்த பனைத் தொழிலாளி மணிகண்டன், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை வாபஸ் பெறுமாறு தன்னை மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
போலீஸ் எஸ்.ஐ. இசக்கிராஜா தன்னை கள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக கூறி காலில் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று வெளியிட்ட வீடியோவில், தமக்கு மது, புகையிலை போன்ற பழக்கங்கள் இல்லை என்றும், பனைத் தொழிலும் பதநீர் வியாபாரமும் செய்து வாழ்வாதாரம் நடத்துவதாகவும் கூறினார். கள் இறக்குவதாக குற்றம் சாட்டி எஸ்.ஐ. மற்றும் உடன் வந்த போலீசார் மரத்தில் ஏற வைத்ததாகவும், பானையை கழற்றி காட்டியதாகவும் அவர் கூறினார்.
சம்பவ இடத்திற்கு தன் சகோதரர், அவரது மகன்-மகள் மற்றும் தந்தை வந்த நிலையில், சகோதரர் வீடியோ எடுத்ததால் மொபைலை தட்டிவிட்டு எஸ்.ஐ. அவதூறாக பேசியதாக மணிகண்டன் குற்றம்சாட்டினார். பின்னர் அவரது மகனை அடிக்க முயன்றபோது தாம் தடுத்ததால் இருவரும் கீழே விழுந்ததாகவும், எஸ்.ஐ.-க்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
அதன் பின்னர் ஆத்திரத்தில் தன் காலில் சுட்டதாகவும், தற்போது மர்ம நபர்கள் வழக்கை வாபஸ் பெறாவிட்டால் “நடப்பதே வேறு” என மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் முழுமையாக குணமடையாத நிலையில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற முயற்சியும் நடப்பதாக கூறினார்.




